பக்கம் எண் :

 107. திருக்கொடிமாடச்செங்குன்றூர்1039


107. திருக்கொடிமாடச்செங்குன்றூர்

பதிக வரலாறு:

திருவீங்கோய்மலையை வழிபட்ட சிவஞானப் பிள்ளையார் திருக்கொடிமாடச் செங்குன்றூரை அடைந்தார். அந்நகரில், வாழ்கின்ற மக்களும் சிவனடியார்களும், மகரதோரணம் முதலியவற்றால் நகரை அலங்கரித்து, வாத்தியமுழங்க, எதிர் கொண்டழைத்தனர். சினவிடையார் திருக்கோயிலுக்கு வர வேண்டினர். அங்ஙனமே ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளி, நம்பர் அவர் திருமுன்பு தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க மண்ணவரும் விண்ணவரும் போற்ற இன்னிசை வண்டமிழாகிய "வெந்த வெண்ணீறு" என்னும் இப்பதிகத்தை அருளினார். இத்திருப்பதிகத்தின் பல பாடல்கள் இத்தலத்தில் பெருமான் அர்த்தநாரீசுரராக விளங்குதலைக் குறிக்கின்றன.

பண்: வியாழக்குறிச்சி

பதிக எண்: 107

திருச்சிற்றம்பலம்

1152. வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்

திகழ்மார்பில் நல்ல

பந்தண வும்விரலா

ளொருபாக மமர்ந்தருளிக்

கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்

செங்குன்றூர் நின்ற

அந்தண னைத்தொழுவார்

அவல மறுப்பாரே. 1

_________________________________________________

1. பொ-ரை: விரிக்கப் பெற்ற பூணநூல் திகழும் திருமார்பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.