இருக்கிறது. சுவாமி பெயர்
ஆரணியசுந்தரர்; இறைவி பெயர் அகிலாண்டநாயகி.
தீர்த்தம் காவிரி.
இத்தலத்தைப்பற்றிக்
கல்வெட்டு ஒன்றும் இருப்பதாக அறியக் கூடவில்லை.
6. திருமருகல்
தலம்:
சோழநாட்டுக்
காவிரித்தென்கரைத்தலங்களில் 80ஆவது தலம் நாகைமாவட்டம்
நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம், நாகை, திருவாரூர்,
மயிலாடுதுறைகளிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
மருகல் என்பது ஒருவகை வாழை. இது கல்வாழையெனவும்
வழங்குகின்றது. கருங்கல் தளத்திலேயே வளர்வதால்
இப்பெயர்த்தாயிற்று என்கின்றார்கள். அதன் பழத்தை
இறைவனுக்கு நிவேதிக்கலாமேயன்றி மக்கள் உண்ணல்
ஆகாது; உண்டால் வயிற்றுநோயுண்டாகும் என்பது அவ்வூர்மக்கள்
வாய்மொழி. ஆனால் எப்போதும் காய் இருக்குமாம்.
இந்த வாழை தலவிருட்சமாதலின் இத்தலத்திற்கு இப்பெயர்
வந்தது. கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய
எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப்
பெருங்கோயில்.
பாண்டியநாட்டு வணிகனாகிய
தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத்
தன்மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான்.
அவர்களுக்குப் பருவம் வந்தகாலத்து ஒவ்வொருத்தியாகப்
பிறருக்கு மணம் செய்துகொடுத்தான். அதனை உணர்ந்த
ஏழாமவள் தாய்தந்தையர் அறியாமல் தன் நன்மாமனோடு
உடன்போக்கு நிகழ்த்தினாள், திருமருகலையடைந்து
ஒரு திருமடத்தில் இராத்தங்கினாள், அன்றிரவு அந்தச்
செட்டி குமரனை வினைவயத்தால் பாம்பு தீண்டியது. அவன்
இறந்தான். அவள் இறைவனைநோக்கி முறையிட்டுப்
புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காகவந்த திருஞானசம்பந்த
சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி
அருள்சுரக்கச் செய்தது. சுவாமிகள் திருப்பதிகம்
பாடி அவனை எழுப்பினார். தம் திருமுன்பே அவர்களுக்குத்
திருமணம் முடிப்பித்தார் என்பது இத்தலத்தைப் பற்றிய
சிறந்த நிகழ்ச்சி.
இறைவன் மாணிக்கவண்ணர்.
இறைவி வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை. தீர்த்தம்
மாணிக்க தீர்த்தம். இது கோயில்
|