பக்கம் எண் :

1054திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


109. திருச்சிரபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 109

திருச்சிற்றம்பலம்

1174. வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே. 1

1175. அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயன் மிளிர்வயற் சிரபுரமே. 2

__________________________________________________

1. பொ-ரை: கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.

கு-ரை: இப்பதிகம் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் பெருமான் நகரம் சிரபுரமாகிய சீகாழி என்கின்றது. வார் - கச்சு.

2. பொ-ரை: ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.

கு-ரை: அருமறை - எக்காலத்தும் உணரும் அருமைப் பாட்டினையுடைய வேதம்.