பக்கம் எண் :

1206திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


131. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

12-ஆம் பதிகம் பார்க்க.

பண் : மேகராகக்குறிஞ்சி

பதிக எண்: 131

திருச்சிற்றம்பலம்

1405. மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண்

குணங்களும் விரும்புநால்வே

தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப்

பளிங்கேபோ லரிவைபாகம்

ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்

கருதுமூ ருலவுதெண்ணீர்

முத்தாறு வெதிருதிர நித்திலம்வா

ரிக்கொழிக்கு முதுகுன்றமே. 1

_________________________________________________

1. பொ-ரை: மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப் பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: சுவைகளும், இசையும், எண்குணங்களும், வேதமும் அறியவொண்ணாத தலைவன், அகச்சமயமாறுக்கும் ஒரே தலைவன் திருவுளங்கொண்ட ஊர், மணிமுத்தாறு மூங்கில் உதிர்த்த முத்துக்களைக் கொழிக்கும் திருமுதுகுன்றமே என்கின்றது. மெய்த்து ஆறு சுவை - உடற்கண்ணதாகிய உப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு என்னும் ஆறுசுவைகள். சுவை, இசை, வேதம் முதலியன மாயா காரியங்கள் ஆதலின் அவற்றால் அறியப்பெறாதவன் ஆயினன்