| 
 132. திருவீழிமிழலை பதிக வரலாறு: (11-ஆம் பதிகம் பார்க்க) பண்: மேகராகக்குறிஞ்சி பதிக எண் : 132 திருச்சிற்றம்பலம் 
    1416. ஏரிசையும் வடவாலின்
    கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நேரியநான் மறைப்பொருளை
    யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை
    வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே. 1 _________________________________________________ 1. பொ-ரை: அழகிய வடவால
மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி
முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய
நால்வேதங்களின் உண்மைப் பொருளை உரைத்து
அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய
சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்
புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும்
மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத்
தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள்
நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும்
சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.  கு-ரை: வடவாலமரத்தின் கீழ்
நால்வர்க்கு அறம் உரைத்து ஒளிநெறியளித்த
இறைவன்கோயில், பண்டிதர்கள் பலகாற் பயிலும்
ஓசையைக்கேட்டு, கிளிகள் வேதப்பொருள் சொல்லும்
திருவீழிமிழலையாம் என்கின்றது. ஏர் - அழகு.
எழுச்சியுமாம். ஈரிருவர் - சனகர் முதலிய
தேவமுனிவர் நால்வர். "நேரிய நான்
மறைப்பொருள்" எனவே இங்ஙனம் இறைவன்முன்
உணராத பரம்பரையினர் தற்போதமுனைப்பால்
நேர்மையற்ற பொருளுங்கொள்வர் என்பது அமைந்து
கிடந்தது. ஒளிசேர் நெறி - சிவஞான நெறி. வேரி -
தேன். |