இராஜேந்திரன் I,
இராஜாதிராஜன் I, பரகேசரி இராஜேந்திரன்,
இவர்கள் தருமங்களும் பல உள்ளன.
31. திருப்பனையூர்
சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம். பேரளம் - திருவாரூர்
பேருந்து வழியில் சன்னாநல்லூரை அடுத்துள்ளது.
இங்கு,
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் நடன தரிசனம்
காட்டியருளினார். பராசரமுனிவர் பூசித்துப் பேறு
பெற்றார். கரிகால்வளவன் இங்கு வளர்ந்தான்
என்றும், அவனுக்கு விநாயகர் துணை இருந்தார் என்றும்
சொல்லப்படுகிறது.
இறைவன் பெயர்
சௌந்தரநாதர். இறைவிபெயர் பெரியநாயகி.
தீர்த்தம் அமுதபுஷ்கரிணி; இது மகாலட்சுமி
தீர்த்தம் எனவும் வழங்கும். விநாயகர்
துணையிருந்த பிள்ளையார். தலவிருட்சம் பனைமரம்.
நன்னிலம் இரயில்
நிலையத்திலிருந்து தென்கிழக்கே கரை
மார்க்கமாக ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது.
32. திருமயிலாடுதுறை
சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம். சிதம்பரம் -
கும்பகோணம் பேருந்து வழியில் உள்ள நகரம்.
சென்னை - திருச்சி நேர்வழி இருப்புப்பாதையில்
இரயில் சந்திப்பு நிலையம். இரயில்
நிலையத்திலிருந்து ஆலயம் கிழக்கே 2 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
அம்மை மயில்
உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இங்கு
அம்மையின் வேண்டுகோளுக்காக இறைவன் மயில்
உருக்கொண்டு தாண்டவமாடினார். இதற்குக்
கௌரீதாண்டவம் என்று பெயர். தலம்
கௌரீதாண்டவபுரமாயிற்று.
இறைவன் பெயர்
மாயூரநாதர். கல்வெட்டுக்களும் தேவாரமும்
மயிலாடுதுறையார், மயிலாடுதுறையரன் எனக்
குறிக்கின்றன. இறைவியின் பெயர் அஞ்சல்நாயகி,
அபயாம்பிகை என்பன. தீர்த்தம் காவிரியில் இடப
தீர்த்தத் துறை விசேடம். துலாமாதம் முழுவதும் இங்கு
நீராட்டு விழா நடைபெறும்.
|