பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்149


கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிப் படியெடுக்கப்பட்டதாகப் பதினாறு கல்வெட்டுக்கள் உள்ளன. பணிசெய்த அரசர்கள் குலோத்துங்கன் I, இராசாதிராசன் II, குலோத்துங்கன் III, இராஜராஜன் III, சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவர்களாவர். இக்கல்வெட்டுக்களால் நிலம் பொன் அளிக்கப்பெற்றமை அறியப்பெறுகின்றன. இறைவன் திருமயிலாடுதுறை உடையார்1 எனவும் குறிக்கப்பெறுவர். இக்கல்வெட்டுகளில் ஐந்துபோக ஏனையவை ஐயாறப்பரைப் பற்றியன. இத்தலத்து ஐயாறப்பர் கோயில் தனியே மாயூரநாதர் கோயிலுக்குத் தென்மேற்கில் உள்ளது. இந்த ஐயாறப்பர் ஜயங்கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந்தூர்நாட்டு குலோத்துங்க சோழன் குற்றாலமாகிய திருவையாறுடையார் எனக் குறிக்கப்பெறுவர்2. இத்தலத்து விக்கிரமசோழன் திருமடம் என ஒன்றிருப்பதாகக் குறிக்கப்பெறுகின்றது3. முதற் குலோத்துங்கன் சுங்கம்தவிர்த்த சோழன் எனப்படுகின்றான். ஐயாறப்பர் கோயில் ஐயாறப்பரைப் பிரதிஷ்டை செய்தது போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பெறுகின்றன4.

33. திருவேட்களம்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். சிதம்பரத்துக்கு கிழக்கே 2 கி.மீ. தூரத்திலுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ்பால் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் மூங்கில்வனம் எனவும் கூறப்பெறும். அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதாஸ்திரம் ஏந்திய இறைவன் திருவுருவமும், அர்ச்சுனன் தவநிலையைக் காட்டும் திருவுருவமும் இருக்கின்றன. இறைவன் வேடனாகவந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை ‘வேடனார் உறைவேட்களம்’ என்ற அப்பர் வாக்கும் நன்கு விளக்கும்.

இறைவன் பெயர் பாசுபதேசுவரர், இறைவியின் பெயர் நல்லநாயகி. கோயிலுக்கெதிரில் தீர்த்தம் உண்டு. புதிய திருப்பணி. திருஞானசம்பந்த சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதற்கு அஞ்சி,

_____________________

1 372 of 1907, 2 380 of 1907, 3 376 of 1907, 4 377 of 1907.