பக்கம் எண் :

150தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


இத்தலத்திலேயே தங்கிச் சிதம்பரத்தைத் தரிசித்தார் என்பது பெரியபுராண வரலாறு.

கல்வெட்டு:

சகம் 1488-ல் (கி.பி. 1556-ல்) சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத் திருவேட்களங் கிராமத்தை அச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது.1

34. திருவாழ்கொளிபுத்தூர்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இன்று திருவாளபுத்தூர் என வழங்குகிறது. தேவாரத்தில் வாழ்கொளிபுத்தூர் எனவும், வாள்ஒளிபுற்றூர் எனவும் வழங்கப்பெறுகின்றது. திருமால் மாணிக்க லிங்கத்தைத் தாபித்து வழிபட்டார். வடமொழியில் அரதனபுரம் என வழங்கும். வண்டு, அருச்சுனன் பூசித்த தலம். அருச்சுனன் செய்த பூசைக்கு உகந்தபெருமான் அவன் வாளைப் புற்றில் ஒளித்துவைத்திருந்து, மீட்டும் அவன் அத்தினாபுரி திரும்பும் போது அளித்தார் என்பது வரலாறு. இதனாலேயே வாள்ஒளிபுற்றூர் ஆயிற்று என்பது புராணம். "உன்கரவாள் நின்ற வாகையின் அயல் புற்றொளித்தான்" என்பது தலபுராணப் பாடற்பகுதி. இறைவன் திருமேனி மாணிக்கமாதலின் வாள்ஒளிபுத்தூர் என்பது இங்ஙனமெல்லாம் மாறிற்றோ என்று எண்ணவும் இடமுண்டு. வாள் ஒளி - மிக்க ஒளி.

35. திருப்பாம்புரம்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். பேரளம் - கும்பகோணம், பேருந்து வழியில் உள்ளது.

பாம்பு புரம் என்பது பாம்புரம் என மருவியது. நாகராஜன் பூசித்த தலம். ஆதிசேடனுடைய மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ளன. இறைவன் பாம்புரேஸ்வரர். இறைவி வண்டார் குழலி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்.

_____________________

1 259 of 1913.