பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்155


சுவாமிபெயர் தேவரசிங்கப்பெருமான், ஊர்த்துவ தாண்டவேசுவரர். அம்மைபெயர் வண்டார்குழலி. தீர்த்தம் முத்திதீர்த்தம். தலவிருட்சம் பலா.

கல்வெட்டு:

அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்1. நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்2. அம்மை வண்டார்குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படுகிறார்3.

ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்டநாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம்பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

40. திருவதிகை

நடுநாட்டுத்தலம். கடலூர் - சென்னை இருப்புப் பாதையில் பண்ணுருட்டி இரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் நகர்களிலிருந்து பேருந்துகளில் பண்ணுருட்டி வரலாம். அப்பர் அருள் பெற்ற தலம்.

_________________________

1 468 of 1905, 2 482 of 1905, 3 495 of 1905.