பக்கம் எண் :

154தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


கோயிலுக்கு எதிரில் மிக உக்கிரதேவதைகளான தேரடிக் கருப்பண்ணசாமியும், மதுரைவீரன் கோயிலும், அடைக்கலங்காத்தான் கோயிலும் இருக்கின்றன. பார்வதி, பிரமன், இலக்குமி, அகத்தியர் முதலியோர் வழிபட்டதலம். வைகாசி மாதம் பெருவிழா நடக்கும்.

கல்வெட்டு:

1891ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்ற 34 எண்ணுள்ள கல்வெட்டு ஒன்றுள்ளது. ஏனைய எடுக்கப்பெறவில்லை போலும். இது ஹொய்ஸள மன்னன் வீரசோமேஸ்வரன் காலத்தது. இதனால் இக்கோயிலுக்குப் பதினாயிரங்கலம் அரிசி கிடைத்ததாகத் தெரிகின்றது. இவன் கி.பி. 1253இல் சமயபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தான். சோழ அரசர்களில் குலோத்துங்கன் விளக்கு எரிக்க நிபந்தம் அளித்திருக்கிறான்.

39. திருவாலங்காடு

தொண்டை நாட்டுத்தலம். திருவள்ளூர் - அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது. திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

நடராஜப்பெருமான் நடனஞ்செய்யும் சபை ஐந்தனுள் இது இரத்தினசபையாகும். இறைவன் காளியை ஊர்த்துவ தாண்டவத்தால் தோற்கச்செய்த தலம். இதனைத் தேவாரம் ‘ஆடினார் காளிகாண ஆலங்காட்டடிகளாரே’ என்று சொல்லும். பதஞ்சலி கார்க்கோடகன் என்ற பெயரோடும், வியாக்கிரபாதர் முஞ்சிகேசர் என்ற பெயரோடும் எப்பொழுதும் நடனதரிசனம் செய்வர். கைலைக்குத் தலையாலே நடந்து சென்ற காரைக்காலம்மையார், என்றும் திருவடிக்கீழ் ஆனந்த தாண்டவ தரிசனத்தோடு அமர்ந்திருக்கின்றார். திருஞானசம்பந்த சுவாமிகள், அம்மையார் தலையாலே நடந்த தலமென்று மிதித்தற்கு அஞ்சிப் புறம்போக, இறைவன் கனவில் ‘எம்மைப் பாட மறந்தனையோ’ என்று கேட்டுப் பாடல்பெற்ற தலம். இங்கே வாழ்ந்த வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டினார்கள். இதனைத் ‘துஞ்ச வருவாரும்’ என்னும் பதிகத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் விளக்கியுள்ளார்கள்.