பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்157


41. திருச்சேய்ஞலூர்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருப்பனந்தாள் பேருந்து வழியில் உள்ளது.

முருகன் திருக்கைலையில் இருந்து, சூரசம்காரத்தின் பொருட்டு, வீரமகேந்திரத்திற்கு எழுந்தருளியபொழுது, வழிநடையில் இங்குவந்து சிவபூசை செய்தருளினார் என்பது கந்தபுராண வரலாறு. சண்டேசுவர நாயனார் திரு அவதாரஞ் செய்தருளியதலம். இவ்வரலாறு இவ்வூர்ப் பதிகத்து ஏழாம் பாடலில் விளங்கக்காணலாம். சண்டேஸ்வரர் அவதாரஸ்தலம் என்று சம்பந்த சுவாமிகள் சிவிகையினின்றும் இறங்கி நடந்து சென்று வழிபட்டார்கள் என்று பெரியபுராணங்கூறும். முருகன் வழிபட்ட தலமாதலின் சேய் நல்லூர் என்பது சேய்ஞலூர் என்றாயிற்றுப்போலும். இத்தலம் இக்காலத்துச் சேங்கனூர் என வழங்குகிறது.

சுவாமிபெயர் சத்தகிரீசுவரர். அம்மைபெயர் சகிதேவியார். தீர்த்தம் மண்ணியாறு.

கல்வெட்டு:

1932 இல் எடுத்த 89 ஆம் கல்வெட்டு ஒன்றே உள்ளது.

42. திருவலிவலம்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. சூரியனும், காரணரிஷியும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமிசந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப் பக்கந்தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று. சுந்தரமூர்த்திநாயனார், திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ‘சொல்லியவேசொல்லி ஏத்துகப்பான்’ என இருவர் பாடல் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார்.

சுவாமி பெயர் மனத்துணைநாதர். அம்மை பெயர் மாழையங்கண்ணி. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் காரணர் கங்கை.