பக்கம் எண் :

170தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


18 நாடு குறிக்கப்படுகின்றது. மேலும் வண்டல்படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப்பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன1. மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

52. திருஊறல்

தொண்டை நாட்டுத்தலம். இத்தலம் தக்கோலம் என வழங்கப் பெறுகிறது. இரயில் நிலையம் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று. சம்வர்த்தமுனிவர் பூசித்துப் பேறு பெற்றதலம். இக்கோயிலையடுத்து மதிலோரத்தின் கிழக்கே உள்ள கங்காதரர் சந்நிதியில் மேற்குப் பிராகாரத்தில் விருஷபவாயிலிருந்து அகோராத்ரம் தீர்த்தம் வருவது ஸ்தல மகிமையை விளங்கும். இறைவன் உமாபதீசுவரர், ஜலநாதேசுவரர். இறைவி உமையம்மை. தீர்த்தம் பார்வதி தீர்த்தம். விசயநகர அரசர்களால் நந்திதீர்த்தம் என்றழைக்கப்பட்டது. தக்கோலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1.5.கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

கல்வெட்டு:

கல்வெட்டில் ஜலநந்தீசுவரர் என்று வழங்கப்பெறும். இராஜகேசரிவர்மன் ஆட்சியில் கங்கமன்னன் பிருதிவிபதியால் வெள்ளிப்பாத்திரம் தானம் செய்யப்பட்டது2. அவன் மனைவி அருள் மொழிநங்கையால் கோதானம் செய்யப்பட்டது3. கோ பார்த்திவேந்திர வர்மன் ஆட்சியில் துர்க்கைச்சிலைக்கு விளக்குக்கள் அளிக்கப் பட்டுள்ளன4. திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்திதேவன் என்கிற யாதவனால் நிலம் தானம் செய்யப்பெற்றுள்ளது5. மற்றவை விளக்கிற்கும், மற்றச் செலவுகளுக்கும் பொன், பணம், நிலம், ஆடுகள், நெல் முதலியன வழங்கியதைத் தெரிவிக்கின்றன.

_________________________

1 322 of 1906, 2 5 of 1197, 3 7 of 1197. 4 14 of 1197, 5 16 of 1197.