53. இலம்பையங்கோட்டூர்
தொண்டைநாட்டுத்தலம்.
கூவத்துக்குத் தென்மேற்கே 2 கி.மீ. தூரத்திலுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள்
செல்கின்றன.
இங்கு அரம்பையாதியர்
பூசித்துப் பேறுபெற்றனர். அரம்பையங்கோட்டூர் என்பது
இலம்பையங்கோட்டூர் என மருவியது. இறைவன் சந்திரசேகரர்.
இறைவி கோடேந்து முலையம்மை. தீர்த்தம் சந்திர
தீர்த்தம். இத்தலம் திருவிற்கோலத்தினின்றும்
தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கல்வெட்டு:
பாண்டியன் கோநேரின்மை
கொண்டான் திரிபுவனச் சக்ரவர்த்தி ஜடாவர்மன்
சுந்தரபாண்டியன் ஆட்சியில் மணவிற் கோட்டத்தின்
பகுதியான கான்றூர் நாட்டிலுள்ள இலம்பையங்கோட்டூர்
என வழங்கப்பெறும்1, திரிபுவனச் சக்கரவர்த்தி திரிபுவன
வீரதேவனது ஆட்சியில் கான்றூர் நாட்டிலுள்ள சதுர்வேதிமங்கலம்
இலம்பையங்கோட்டூர் எனவும் வழங்கப் பெறும்2.
இறைவன் பெயர் இலம்பையங்கோட்டூர் உடையநாயனார்
என்பது3.
இராஜாதிராஜதேவன்
காலத்தில், தேவநாயகசுவாமிகோயில், சிவபாதசேகர
மூவேந்தவேளானால் கட்டப்பட்டுள்ளது4. ஏனையவை
விளக்கிற்கு நெல், பொன், ஆடுகள், நிலங்கள் முதலியன
தானங்கொடுக்கப்பட்டதை அறிவிக்கின்றன.
54. திருவிடைச்சுரம்
தொண்டை நாட்டுத்தலம்.
மக்கள் வழக்கில் திருவடிசூலம் என வழங்கப்படுகிறது.
செங்கற்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும்
பேருந்தில் திருவடிசூலம் செல்லலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து
1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.
இத்தலம் மலைகளின்
இடையில் கற்சுரத்தில் அமைந்தமையின் இப்பெயர்
எய்தியது. சனற்குமாரமுனிவர் பூசித்துப் பேறுபெற்ற
தலம்.
___________________________
1 232 of 1910, 2 234 of
1910, 3 234 of 1910, 4 231 of 1910.
|