முதலாம்
இராஜேந்திரன் காலத்தில் மாசித்திருவிழாவில்
அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார்
சந்நிதியில் திருத்தொண்டத் தொகை பாராயணம்
செய்வாருக்கு நிலம்விட்டதாக உள்ளது.
சம்பந்தர் முதலிய மூவருக்கும், தெற்கு,
மேற்கு, வடக்கு ஆகிய கோபுரங்களைச் சார
இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகைத்
திருவீதியில் தனித்தனியே திருக்கோயில்கள்
இருந்ததாகவும், அவற்றுள்
சம்பந்தப்பிள்ளையார் திருக்கோயில்
பொன்வேயப் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுக்கள்
அறிவிக்கின்றன. இதனால் திருமுறைகளுக்கும்,
திருமுறைகளைப் பாடியருளிய சமயாசாரியர்களுக்கும்
எவ்வளவு சிறப்பு, சிதம்பரத்திலிருந்தது
என்பதை ஊன்றிநோக்க வேண்டும்.
அப்பூதியடிகள்
நாவுக்கரசர்மீதிருந்த பற்றினால் நிலம் புலம்
எல்லாவற்றிற்கும் அவர்பெயரிட்டு வழங்கியதுபோல,
அரசர்கள் ஆனந்தக்கூத்தர்மீதிருந்த பற்றால்,
குடிஞைக் கல்லுக்கும், மரக்காலுக்கும்
ஆடவல்லான் என்று பெயரிட்டு வந்தனர்.
சிற்றூர்களுக்குத் தில்லைவிடங்கன், கூத்தனூர்,
கோயிற்பூண்டி, சபாநாயகபுரம், தில்லை
நாயகபுரம், நடராஜபுரம் என்றும்,
ஒடைநீர்நிலை முதலியவற்றிற்குக் கூத்தாடுநாயகன்
திருவோடை. ஆளுடையநாயகன் திருவோடை என்றும்
பெயரிட்டிருந்தனர். தம்மிடம் அரசகாரியம்
பார்ப்பாருக்குத் தில்லையம்பலப் பல்லவராயன்,
திருச்சிற்றம்பலமுடையான் நக்கன், இளைய
திருச்சிற்றம்பலமுடையான், தில்லையம்பலப்
பேரரையன் என்றும் பெயர் வைத்திருந்தமை
அரசர்கட்கு உள்ள அன்பின் முதிர்ச்சியை
எடுத்துக்காட்டும் தக்க சான்றுகளாகும்.
இத்தலத்திற்குப்
பணிசெய்த மன்னர்களில் பல்லவர்களில்
இரணியவர்மன், கோப்பெருஞ்சிங்கன்
முதலியோர்களும் பாண்டியர்களில் மாறவர்மன்
சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்,
மாறவர்மன் வீரபாண்டியன், விக்கிரம
பாண்டியன் குலசேகரன் முதலியோர்
குறிக்கப்படுகிறார்கள். சோழமன்னர்களில்
முதல் பராந்தகன் முதல், மூன்றாம் இராஜராஜன்
வரையிலுமாகப் பதின்மர் குறிப்பிடப்
படுகிறார்கள். இவர்களில் இரணியவர்மனும்,
முதற்பராந்தகனும், மணவில்
கூத்தன்காளிங்கனும், அனபாயன் முன்னோர்களும்
அனபாயனும் பல காலங்களில் பொன்வேய்ந்தார்கள்
என்று கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. இன்னும்
விஜயநகர அரசர்களும், நாயக்க அரசர்களும்,
சேர அரசர்களும் திருப்பணிகள்
மிகச்செய்துள்ளார்கள். இவற்றின்
விரிவையும் விளக்கத்தையும் எமது சிதம்பரம்
என்னும் நூலில் பரக்கக்காண்க.
|