பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்185


நடைபெற்றுவந்தன1. மாசிமாதத்தில் ஒரு திருவிழா நடந்ததாகத் தெரிகிறது. அதில் திருத்தொண்டத்தொகை விண்ணப்பம் செய்யப்பெற்று வந்தது2. ஏனைச் சிவத்தலங்களில் அம்மைக்கு ஆடிப்பூரவிழா நடைபெற்று வருவது போல இங்கு ஐப்பசிப் பூரவிழா நடைபெற்று வருகிறது3. மாசிமக நட்சத்திரத்தன்று நடைபெறும் கடலாட்டு விழாவும் குறிப்பிடப்படுகின்றது "திருப்புதியது விழா" என்று ஒன்று காணப்படுகின்றது. அதில் அம்மைக்குப் புதிய ஆடை சாத்தியதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. திருப்புடைவையீடுவிழா என்றும் அது வழங்கப்பெற்றுப் பின் திருப்புதியது விழா என்று வந்திருக்கலாமோ என்றும் கருத இடமுண்டு4. அன்றி, திருப்பாலி வளத்திருநாள் என்று ஒருவிழா குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஐப்பசிப்பூரத் திருநாளைக் குறிப்பதாகுமோ? என ஐயந்தருகிறது. இதில் அம்மை நீராடி, வெள்ளணி அணிந்து, பயறு முதலிய நவதானியங்களின் முளையைத் தன்மடியில் தரிக்கும் நாளாதலின் பாலிவளத்திருநாள் எனப்பட்டது போலும். (பாலி - நவதானிய முளை)5 வசந்தத்திருநாள் என்பது பெருமான் வசந்த உற்சவம் கொண்டாடக் குலோத்துங்கன் தோப்புக்கு எழுந்தருளியதாகத் தெரிகிறது6. திருக்கண்சாத்தும் திருநாளும், பெருமான் பரிவார நாயன்மார்களுக்குத் திருவருள் நோக்கம் செய்யும் திருநாளாகும் என அக்கல்வெட்டே குறிப்பிடுகிறது.

இந்த ஒன்பது விழாக்களையுமன்றி ‘எதிரிலிசோழன் சிவபாதசேகரன் சித்தத்துணைப் பெருமாள்விழா’ என ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சிவபாதசேகரன் என்பது முதல் இராஜராஜனுக்கு வழங்கிய பெயர். எதிரிலி என்பது முதற்குலோத்துங்கனுக்கு வழங்கியபெயர். ஆகவே தன் நாடுகளில் தன் குலமுதல்வனாகிய இராஜராஜன்வரையில் இருந்த சோழமன்னர்கட்குச் சித்தத்துணையாகவே இருந்துவந்த நடராஜப் பெருமானுக்கு நடந்த பெருவிழாக்களையே இது குறிப்பிட்டதாகுமென ஊகிக்கலாம். இதுவன்றித் தைப்பூசத்தில் பாவாடையிட்டுப் பெரிய பூசவிழா ஒன்று நடத்தியதாகவும் தெரிகிறது. இத்தகைய திருவிழாக்கள் கல்வெட்டுகளிலிருந்து அறிய வருகிறது என்பது சிந்திக்கத்தக்கதொன்று.

கீழக்கோபுரத்தின் வாயிலின் வலப்பக்கத்தில் காணப்பெறும் கல்வெட்டு, சோழகுலவல்லியால் நாயன்மார்களுடைய பாமாலையைப் பாராயணம் செய்விப்பதற்காக நிபந்தம் விட்டதை அறிவிக்கிறது.

__________

1 Vol. IV 223, 2 Vol. IV. 223, 3 360 of 13, 4 269 of 13, 5 Vol. IV. 43, 6 Vol. IV. 43.