பதிநல்லூர்
உய்யவந்தான் சிய்யாழிப் பிள்ளையான
ஜெயதுங்கவன்மன் மகாமண்டபந் தொடங்கிக்
கீழைவாசல்வரையில் திருப்பணிசெய்தான்.
இத்திருப்பணி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
காலத்ததாகும். இந்தக்கோயிலில்
சிவன்படரில் (செம்படவர்) ஒருவனான ஆலன் என்பான்
அதிபத்தநாயனார் படிவத்தை எழுந்தருளுவித்தான்.
64.
திருச்சிராப்பள்ளி
சோழ நாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம் தமிழகத்தின் பெரிய
நகரங்களில் ஒன்று. இரயில், பேருந்து
வசதிகள் உள்ளன. தமிழகத்தின்
அனைத்திடங்களிலிருந்தும் செல்லலாம்.
இத்தலம் மிக விளக்கமானது.
மலைக்காட்சியின் முதலிடமாக உள்ளது.
காவிரிக்குத் தென்கரையில் அமைந்தது.
கலாசாலைகளும், கல்லூரிகளும் நிறைந்தது.
எல்லாவிதமான அறிவுத்துறையிலும் வளர்ச்சிக்குரிய
இடமாக இருக்கிறது.
சரித்திர
காலத்திலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு
முன்பு இருந்தே விளங்கிவருவது. சோழர்
தலைநகரங்களில் ஒன்றாகிய உறையூரைத்
தன்னகத்துக்கொண்டு விளங்குவது.
பெயர்க்காரணம்:
திரிசிராப்பள்ளி
என்பதற்கு, திரிசிரன் என்னும் அரக்கன்
பூசித்துப் பேறுபெற்றதனால், இப்பெயர்பெற்றது
என்று புராணங் கூறும். இம்மலைக்கே மூன்று
சிகரங்கள் உள்ளன. அதனால்
திரிசிராப்பள்ளியெனப் பெற்றது என்று
செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தப்
பொருள்களில் வழங்கிய திருசிரப்பள்ளி
திரிசிராப்பள்ளி ஆதற்கு என்ன விதியுண்டு என்பதை
அறிஞர்கள் ஆய்ந்து முடிவுகாண்பார்களாக.
நமது
சமயாசாரியப் பெருந்தகையார்கள் ‘சிராப்பள்ளிக்
குன்றுடையானை’, ‘சிராப்பள்ளிச் செல்வன்’ ‘சிரகிரி’
எனவே வழங்குகின்றார்கள். திரிசிரா என்பதில் திரி
என்பது மூன்று என்ற பொருள் குறித்த
சொல்லாயின் அதனை விடுத்துச் சிராப்பள்ளி என்று
வழங்கியிரார்கள். ஆதலால் அவர்கள் காலத்தில்
திரு என்பதை அடைமொழியாகக் கொண்டதே சிராப்பள்ளி
என்பதற்கு வேறு
பொருள் இருந்திருக்கவேண்டும் என்பதனைக் கருத
இடந்தருகின்றது.
|