"சிராப்பள்ளி"
என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது
சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப்
பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய
சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது:-
சிராப்பள்ளிக்
கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான
முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு
சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று
அமைத்திருக்கிறான். அதில் தான்
சைவனானதையும் 1திருவதிகையில் அமண்
பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும்
குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது
மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர்.
இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு
வல்லத்திலும் உள்ள குகைக்
கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப்
போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும்
அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை
இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான
மகேந்திரவர்மன் கட்டினான்2.
உச்சிப்பிள்ளையார்
கோயிலின் பின்பாகத்தில் இன்றும்
சமணமுனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம்.
அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த
சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப் பெற்றுள்ளன.
அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின்
நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா
என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை
அறிவிக்கிறது. ஆதலால் பள்ளி கோயிலானாலும்,
பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.
ஊர்ப்பெயரும் -
கோயிற் பெயரும்:
ஊர்ப்பெயர்
சிற்றம்பர். கோயிற்பெயர் சிராப்பள்ளி.
இதனை நன்கு விளக்குவது, இராஜராஜன் I
ஆட்சியாண்டு 16 இல் வெட்டப் பெற்ற
விக்கிரமசிங்க மூவேந்த வேளான் விளத்தூர்
நாட்டில் நிலம் வாங்கி, அதனைஉறையூர்க்
கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக்
கோயிலுக்கு அளித்தான் என்ற கல்வெட்டுப்
பகுதியாகும். வரகுணபாண்டியன் II ஆம் ஆண்டுக்
கல்வெட்டும் இதனையே குறிக்கிறது. இன்னும் சில
பகுதிகளிலும் சிற்றம்பர், சிற்றம்பர்நகர்,
சிற்றம்பர் பதியென இத்தலம் வழங்கப்படுகின்றது.
ஆதலால் ஊர் சிற்றம்பர் எனவும், கோயில்
சிராப்பள்ளி எனவும் வழங்கிவந்தமை தெளிவு.
_________
1 S.I.I. Vol.
I No. 33, 34. 2 S.I.I. Vol. I
No. 33.
|