பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு231


ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் ‘தளிரிள வளரென’ எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். பின்னர் அப்பரும் அவ்வருட்காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.

மதுரைப் பயணம்:

அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந்தது. ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்ட சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகியகாரணத்தால் மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர்.

பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தரும் அப்பரும் மறைக்காட்டீசன் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் ‘பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது?’ எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி ‘நாம் போற்றுவது நம்