பக்கம் எண் :

232திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


பெருமானுடைய திருவடிகளை ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது’ எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க ‘வேயுறு தோளிபங்கன்’ என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். தம்மோடு உடன் வரமுற்பட்ட அப்பரடிகளைத் தடுத்து நிறுத்திச் சோழநாட்டில் இறைவனைத் தொழுது இருப்பீர்களாக எனக் கூறித் தமது மதுரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அமைச்சர் வரவேற்பு:

திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறையாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி ‘அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக’ என வாழ்த்தினார். குலச்சிறையார் ‘இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி’ என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார்.

ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் ‘மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது’ எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி ‘அதுவே திருவாலவாய்’ எனக் கூறக்கேட்டு ‘மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து ‘நீலமாமிடற்று’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்,

மங்கையர்க்கரசியார் சந்திப்பு:

ஆலவாய் இறைவர் திருக்கோயிலை வழிபட வந்த மங்கை யர்க்கரசியார் வழிபாடு முடித்துக் கோயில் முன்றிலில் திருஞான