பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு233


சம்பந்தரைக் கண்டு அவர் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் எழுதரிய மலர்க்கரங்களால் அவரை எடுத்தார். ‘யானும் என் நாயகனும் செய்த தவப்பயனால் தங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்’ எனக் கூற ஞானசம்பந்தர் ‘புறச் சமயச் சூழலுள்ளும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் உம்மைக் காணும் பொருட்டே இங்குவந்தோம்’ எனக்கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பித் திருக்கோயில் புறத்தணைந்து குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தார். அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் அடியார்களுக்கு நல்விருந்தளித்து உபசரித்தார்.

திருமடத்திற்குத் தீ வைத்தல்:

பகற்பொழுது கழிந்து இரவு வந்தது. ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர்.

சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். ‘இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக’ என்று கூறி ‘செய்யனே திரு’ என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.

பொழுது விடிந்தது. ஞானசம்பந்தர் திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியது. அதனைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் மன நடுக்கம் உற்றனர். இக்கொடியோர் வாழும் நாட்டில் ஞானசம்பந்தரை வரவழைத்த குற்றத்துக்கு நாம்இறப்பதே சரியான தண்டனை என்று எண்ணினர். திருமடத்திலிடப்பட்ட தீயால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமை கருதி ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய்பற்றி வருத்தியதறிந்து உளம் நடுங்கி மன்னனை அடைந்தார்கள். மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் நோயைக் குணப்படுத்த இயலவில்லை. இந்நிலையில் குலச்சிறையார்