பக்கம் எண் :

 34. சீகாழி523


34. சீகாழி

பண் : தக்கராகம்

பதிக எண்: 34

திருச்சிற்றம்பலம்

360. அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1

361. திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே. 2

__________________________________________________

1. பொ-ரை: வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை இடைவிடாது சென்று வழிபடுபவர் தூய நெறியில் நிற்பவராவர்.

கு-ரை: இது இறைவன் உமையோடு எழுந்தருளியிருக்கும் சீகாழியைப் பரவுவார் தூயநெறியார் என்கின்றது.

அடல் ஏறு - வலிமைபொருந்திய இடபம், மடல் - பூ. தொடர்பார் - இடைவிடாது தியானிப்பவர்.

2. பொ-ரை: அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.

கு-ரை: காழியை இன்றே மலர்தூவி வணங்குங்கள் என்கின்றது. நிரையார் மலர் - வரிசையான பூக்கள்.