105-4. அரையில் ஐந்தலை ஆடரவம்
அசைத்தான். அடியார்களுடைய ஐம்பொறிகளையும்
தத்தம் புலன்களில் செல்லவிடாது தடுத்தாட்கொள்ளும்
தன்மையைப்போல ஆடும்தன்மை வாய்ந்த ஐந்தலைப்
பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் கட்டினான்
என்பது குறிப்பு.
இவ்வாறு பலபாடல்களில்
இவ்வுரையாசிரியர்
சுட்டு என்ற உள்ளுறைச் செய்தியை வெளிப்படுத்தி
இருத்தலைக் காணலாம்.
6. சொற்றொடர்களுக்கு
நயமான உரை காண்டல்:
3-3. வெய்யபடை - கொடியவர்களுக்கு வெம்மையாய்
அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும் படை.
13-1. அரவும் புனலும் மதியும் தலையும்
விரவும் சடை - தம்முள் மாறுபட்ட பல பொருள்களும்
பகைநீங்கி வாழ்தற்கு இடமாகிய சடை.
51-2. வெண்மழு - இறைவன் திருக்கரத்தில்
உள்ள மழுஅலங்காரப் பொருளாதலன்றி, யாரையும்
அழித்தல் இல்லையாதலின் குருதிக்கறை படியாத வண்ணம்
வெண்மழு எனப்பட்டது.
51-3. தீயவல்லரக்கர் செந்தழலுள்
அழுந்த - இறைமைக் குணம் வேண்டுதல் வேண்டாமை இல்லையாய்
இருக்கச் சிலரை அழித்துச் சிலரைவாழ்விப்பது
பொருந்துமோ என்பார்க்குக் காரணம் அருளுவதுபோலத்
தீயராகிய வல்லரக்கர் என்று திரிபுராதிகள் தீமை
தோன்றக் கூறினார்.
51-5. மதியம்வைத்து உகந்த - உகந்த -
மகிழ்ந்த. பலர் சாபத்தால் இளைத்த ஒருவனுக்கு
ஏற்றம் அளித்தோமே என்ற மகிழ்ச்சி.
55-5. மாறு இலாமணியே - சில
ரத்னங்களை அணிந்தால் தீமையும் நிகழக்கூடும் எம்பெருமானாகிய
மணி எத்தகையோருக்கும் நன்மையே செய்தலின் மாறு
இலா மணியே என்றார்.
74-3. பந்தம் உடை பூதம் -
உதரபந்தம் என்ற அணியை அணிந்த பூதம்.
|