பக்கம் எண் :

674திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


54. திருவோத்தூர்

பதிக வரலாறு:

நடுநாட்டுயாத்திரையிலே, சிரபுர வேந்தராகிய பிள்ளையார் திருவண்ணாமலையை வழிபட்டு, திங்கள் முடியார் இனிது அமர்ந்த திருவோத் தூரையடைந்து, இறைவனை வணங்கி எழுந்தருளியிருக்குங்காலத்து, ஒருநாள் அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். பிள்ளையார் காரணம் என்னை? என்று வினாவ, அவர், "அடியேன் இறைவனுக்காக வைத்த பனைகளெல்லாம் ஆண்பனைகளாய்க் காயாவாயின, அதனைக் கண்ட சமணர்கள் நீர்வைத்தபனைகள் காய்க்குமோ!‘ என்று ஏளனஞ் செய்தனர்" என்று விண்ணப்பித்துக் கொண்டார். அதனைக் கேட்ட பிள்ளையார் கோயிலையடைந்து ‘பூத்தேர்ந்தாயன’ என்னும் இப்பதிகத்தைத் தொடங்கி முடித்து, பதினொராந் திருப்பாட்டில் ‘குரும்பை யாண்பனை யீன்குலை ஓத்தூர்’ என்று திருக்கடைக்காப்பு அருளியபோது அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. அடியார்கள் களித்தனர். வியந்தனர். இதனைக் கண்ட சமணரிற் சிலர் தமது கையில் இருந்த குண்டிகையைத் தகர்த்தெறிந்து இறைவன் கருணையைப் போற்றிச் சைவராயினர். சிலர் அந்நாட்டை விட்டு அஞ்சி ஓடினர். குலையீன்ற ஆண்பனைகள் தமது கால எல்லைவரை வாழ்ந்து பிறவி ஒழிந்து சிவத்தைச் சார்ந்தன.

பண் : பழந்தக்கராகம்

பதிக எண்:54

திருச்சிற்றம்பலம்

580. பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. 1

__________________________________________________

1. பொ-ரை: திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.