8. தல புராணம் முதலியன:
5-10. அண்ட மறையவன் - இரணிய கருப்பனாகிய
பிரமன். பிரமன் நீரையே முதற்கண் படைத்தான்
என்பது அதன்கண் பொன் மயமான முட்டையாக உலகை ஆக்கினான்
என்பதும் புராண வரலாறு.
11-7. தம் திருவடிகளைப் பணிந்த தாரகாக்ஷன்,
கமலா க்ஷன், வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும்
சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப்பெயர் ஈந்து
வாயில் காவலராகும் வரத்தால் மிக அருள் செய்தவன்.
இச்செய்தியை அதிகைப்புராண
வரலாறு,
தர்மசங்கிதை வசனம் என்பனவற்றால் அறியலாம்.
12-5. தன் தவவலிமையால் தேவர்களை
வருத்திய அந்த காசுரனைச் சிவபெருமான் பைரவரைக்
கொண்டு முத்தலைச்சூலத்தில் குத்திக் கொணர அவன்
பெருமானைத் தரிசித்ததும் உண்மை ஞானம் கைவரப்பெற்றான்.
அவனுக்குக் கணபதியாம் பதவியை அளித்தார் என்பது
கந்தபுராணம்.
27-5. திருப்புன்கூர்த்தலத்து அம்மை
திருநாமம் சொக்க நாயகி; அழகிய நாயகி,
ஆதலின் இங்கு உகந்தருளியிருக்கும் பெருமான் அழகர்
எனக் குறிப்பிடப்பட்டார். இது தலபுராணச்செய்தி.
31-5. இறையார் வளையாள் - குரங்கு அணில்
முட்டத் திருத்தலத்து இறைவியின் திருநாமம் - இது
தலபுராணச் செய்தி.
32-5. திருவிடைமருதூரில்
சிவபெருமான் தைப்பூசத் திருநாள் அன்று
காவிரியில் தீர்த்தம் கொள்வது தலபுராணச் செய்தி.
42-9. கொக்கு வடிவில் வந்த பகாசுரன்
என்பவனை வாயைப் பிளந்து கண்ணன் கொன்ற செய்தி
பாகவத புராணத்தில் குறிப்பிடப்படுவதாகும்.
45-1. கணவனால் கொல்லப்பட்ட நவஞானி
என்னும் பார்ப்பனி மறுபிறப்பில் தரிசனச் செட்டி
என்ற பெயரோடு பிறந்த தன் கணவனைப் பேய் வடிவினை
மறைத்துப் பெண்வடிவில் வந்து பழையனூர் ஆலங்காட்டில்
கொன்ற செய்தி அவ்வூர்த்தல புராணம் முதலியவற்றில்
உள்ளது.
|