பக்கம் எண் :

774திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


67. திருப்பழனம்

பதிக வரலாறு:

திருவடகுரங்காடுதுறையில் வாலியார் வழிபட்ட, அருமையையமைத்துப் பாடிப்பரவி, பிற தலங்களையும் வழிபட எழுந்தருளிய காழிவேந்தர், முத்தலைச் சூலம் ஏந்திய முதல்வர் எழுந்தருளிய திருப்பழனத்தைச் சேர்ந்தார். கோயிலைக் குறுகி உருகிய மனத்துடன் திருப்பழனநாதரை வணங்கி ‘வேத மோதி’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார். இதனை ‘விழைசொற் பதிகம்’ என விசேடிப்பர் சேக்கிழார் பெருமானார்.

பண்: தக்கேசி

பதிக எண்: 67

திருச்சிற்றம்பலம்

722. வேதமோதி வெண்ணூல்பூண்டு

வெள்ளை யெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார்

புலியி னுரிதோலார்

நாதாவெனவு நக்காவெனவு

நம்பா வெனநின்று

பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்

பழன நகராரே. 1

__________________________________________________

1. பொ-ரை: நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவு பெற வருவார்.

கு-ரை: நாதா நக்கா எனத் தோத்திரிப்பவர்களின் பாவந் தீர்ப்பவர் பழனநகரார் என்கின்றது. நக்கன் - நிர்வாணி. நம்பன் - நம்பப்படத்தக்கவன்.