பக்கம் எண் :

 91. திருவாரூர்941


91. திருவாரூர்

பதிக வரலாறு:

செல்வத் தியாகேசர் சேவடி தொழவேண்டும் என்ற அன்புவெள்ளம் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் உள்ளத்துப் பெருகி வழிகின்றது. அப்பர் பெருமானும் ஆரூர்த் தியாகேசப் பெருமானின் ஆதிரைநாளின் திருவோலக்கச் சிறப்பை எடுத்து விளக்கினார்கள். அதனால் அன்புவெள்ளம் உடைப்பெடுத்து ஓடுகின்றது. ஆரூர்க்கு வழிக்கொண்டு வருகின்றார்கள். கனிந்த சிந்தை கவிதைகளாக வெளிப்படுகின்றது. ‘பாடலனான்மறை‘ என்ற பதிகமாகின்றது. விற்குடி முதலியவற்றை வணங்கிக்கொண்டு திருவாரூர் திருமதிற்புறத்து அணுகுகின்றபோது சிவிகையினின்றும் இறங்கித் தலத்தையும் சிவமாகக்கண்டு, செங்கை நிறைய மலர்களையேந்தித் தூவுகின்றவர்கள் திருவிருக்குக்குறளாகிய இதனைத் தமிழ்நாடுய்ய அருளிச் செய்கின்றார்கள்.

திருவிருக்குக்குறள்

பண்: குறிஞ்சி

பதிக எண்:91

திருச்சிற்றம்பலம்

981. சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1 ________________________________________________

1. பொ-ரை: சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.

கு-ரை: திருவிருக்குறள் என்பது, வீடு காதலிப்பவரால் விரும்பப்பெறும் பாடல். இரண்டு சீர்காளன் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல். வேதங்களுள் இருக்கு, மந்திர வடிவாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திர வடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கமுடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க.