பக்கம் எண் :

948திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


92. திருவீழிமிழலை

பதிக வரலாறு:

திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனாரோடு திருவீழிமிழலையில் வீற்றிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டாக, அப்பசியால் உயிர்கள் வாடின. அடியார்களும் வருந்தினர். அதுகண்ட நாயன்மார்கள் ‘கண்ணுதலான் திருநீற்றுக் சார்பினோர்க்கும் கவலை வருமோ‘ எனத் திருவுளத்து எண்ணித்துயின்றனர். அன்று இரவு இறைவன் கனவில் தோன்றி, ‘காலமாறுதலினால் நீங்கள் கவல்வீரல்லீர்; எனினும் உங்கள் அடியார்களின் வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும்வரை பீடத்தின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலுமாகப் படிக்காசு ஒவ்வொன்று அளிக்கின்றோம்‘ என்று அருள் செய்தனர். விடியலில் இருவரும் சென்று அவ்வாறே இருக்கக் கண்டு எடுத்து வந்து அடியார்கட்கு அமுதளித்தனர். வாகீசர் திருமடத்தில் காலம் தாழ்க்காது அமுதூட்டப் பெறுதலையும் தமதுகாசு வட்டம் கொடுத்து மாற்றப் பெறுதலையும் அறிந்த சிவஞானப்பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சென்று ‘வாசிதீரவே‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்து வாசியில்லாக் காசு பெற்று, சிவனடியார்களுக்கு நேரத்தோடு திருவமுதளித்து எழுந்தருளியிருந்தனர். சில நாள்களில் பஞ்சம் நீங்கிற்று.

திருவிருக்குக்குறள்

பண்: குறிஞ்சி

பதிக எண்: 92

திருச்சிற்றம்பலம்

992. வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1

____________________________________________________

1. பொ-ரை: குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.

கு-ரை: வாசி - உயர்வு தாழ்வு. (வட்டமாகக் கழிக்கும் பணம்.) மாசு - குற்றம். ஏசல் - நிந்தனை.