பக்கம் எண் :

974திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


98. திருச்சிராப்பள்ளி

பதிக வரலாறு:

ஞானசம்பந்தர் மூக்கீச்சரம் பணிந்து, திருச்சிராப்பள்ளிச் சிலம்பணைந்தார். அங்கே இறைவனை வணங்கி மெய்ம் மகிழ்ந்து மனங்குளிர "நன்றுடையானை" என்னும் சொற்றமிழ் மாலைவேய்ந்து போற்றினார்கள்.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 98

திருச்சிற்றம்பலம்

1058. நன்றுடையானைத் தீயதிலானை

நரைவெள்ளே

றொன்றுடையானை யுமையொருபாக

முடையானைச்

சென்றடையாத திருவுடையானைச்

சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங்

குளிரும்மே. 1

____________________________________________________

1. பொ-ரை: நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடு பேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

கு-ரை: சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான். தீயதில்லான் இவையிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள்.

நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப்போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயானதிரு