பக்கம் எண் :

101

     கமலைஞானப்பிரகாச தேசிகர் மாணாக்கர் சுவாமிநாத தேசிகரால்
இயற்றப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது. தூணுகுடி
குருசுப்பிரமணியக் குருக்கள் பண்டாரம் அவர்களால் இயற்றப்பெற்ற
பதிகமும் அச்சில் உள்ளது.

கல்வெட்டு:

     இத்திருக்கோயிலில் திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை
கொண்டானின் பதினேழாம் ஆட்சியாண்டிலும், மாறவர்மன்
சுந்தரபாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டிலும், பொறிக்கப் பெற்ற
இரண்டு கல்வெட்டுக்களும், சகம் 1557இல் பொறிக்கப்பெற்ற ஒரு
கல்வெட்டும், ஆண்டு குறிக்காத மற்றொரு கல்வெட்டுமாக நான்கு
கல்வெட்டுக்கள் இருக்கின்றன.1

     இவைகளுள் இறைவன்பெயர் ஆடானைநாயனார் என்று
குறிக்கப்பெற்றுள்ளது. இவைகள் இறைவனுக்கு நிலம் கொடுத்துள்ள
செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

                    10. திருஆமாத்தூர்

     பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே,
பசு என்றது உயிர்த்தொகுதியை.

     விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி. மீ.
தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது. விழுப்புரம் பேருந்து
நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் திருவாமாத்தூர்
செல்லலாம். இது நடு நாட்டுத் தலங்களுள் ஒன்று.

     இறைவரின் திருப்பெயர் அழகிய நாதர். இத்திருப்பெயரைத்
திருக்குறுந்தொகையில் அப்பர்பெருமான் எடுத்து ஆண்டிருப்பது
மகிழ்தற்கு உரியதாகும்.

     இறைவியாரின் திருப்பெயர் முத்தாம்பிகை, முத்தைவென்ற
முறுவலாள். முத்தார்நகை அழகுடையார் என்பர் அருணகிரிநாதர்.


     1See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1914, No.433-436/. (Ramnad District, Adani Taluk)