பக்கம் எண் :

100

சோழநாட்டிற் புகுந்து காவிரித் தென்கரை வழியாகக் கிழக்கே சென்று,
பாடல் பெற்ற தலங்களை வணங்கி. அவைகளுக்கு இறையிலி நிலங்கள்
அளித்தும், பழுதுற்ற கோயில்களைப் புதுப்பித்தும் வந்தார்.

     அவர் ஜெயங்கொண்ட சோழவள நாட்டில் ஓர் ஊரில் தங்கியிருந்த 
போது, ஆக்கூர் முதலான ஊர்களில் அதிக வரிகளால், குடிகள் நிலத்தைப்
பயிரிடாமல் இருந்தார்கள். சிலர் வெளியேறி விட்டனர். இவர்களை எல்லாம்
அழைத்து, வரிகளைக் குறைத்து, நிலத்தை உழச்செய்தார். இதை ஒரு
கல்வெட்டு உணர்த்துகிறது.

                     9. திருஆடானை

                                                            (திருவாடானை)

     தேவ கோட்டை சாலை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் கிழக்கே
35 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.

     காளையார்கோயிலில் (திருக்கானப்பேர்) இருந்தும் தேவ
கோட்டையிலிருந்தும் திருவாடானை செல்லப் பேருந்துகள் உள்ளன.
பேருந்துகளில் வருவதே எளிதானதாகும். இது பாண்டிநாட்டுப் பாடல்பெற்ற
பதிகளுள் ஒன்று.

     ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற பிருகு முனிவர்,
அவ்வுருவத்துடன் வந்து வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்ற தலமாதலின்
இப்பெயர் பெற்றது.

     தலவிருட்சம் வில்வம்.

     இறைவரின் திருப்பெயர் ஆதிரத்தினேசுவரர். ஆடாணை நாதர் என்ற
வேறுபெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் அம்பாயிரவல்லி.
திருக்கோயிலையொட்டி நான்கு மாடவீதிகள் இருக்கின்றன.

     சூரியதீர்த்தம். திருக்கோயிலின் வடகிழக்கிலுள்ளது. நீலமணியைச்
சிவலிங்கமாகத்தாபித்து, சூரியன் வழி பாடாற்றிப் பேறுபெற்றான். இதற்குத்
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.