|
விளக்குக்காக இரண்டு
கழஞ்சு தானம், நித்தியபடித் தானம், இரண்டு நாழி
அரிசிக்கு மூன்றரைமா தானம் முதலியன இக்கோயிலுக்கு
அளிக்கப்பட்டுள்ளன.
சோழர்வம்சம்
முழுவதும் இக்கல்வெட்டுக்களில் எழுதியிருக்கிறபடியால்
இந்தக்கோயில் சிறந்து விளங்கியிருக்கவேண்டும். இக்கல்வெட்டுக்களால் பல
அரசியல் செய்திகளை அறியமுடிகிறது. இக்கோயிலுக்குப் பலர்
விளக்குவைப்பதற்காக ஆடுகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுள்
ஆடவரும் பெண்டிரும் உளர்.
விஜயநகரத்தார்
நாளில் மல்லிகார்ச்சுனராயன் காலத்தில் மூன்று
ஊர்களில் முப்பது பொன்வரி தள்ளுபடி செய்யப்பட்டது. மல்லரச தண்ட
நாயக்கர், ஆராதனைக்காக ஒரு ஊரைச் சர்வமானியமாகக் கொடுத்தார்.
இரவிமணியன் என்பான் இக்கோயிலுக்கு ஒரு மண்டபங்கட்டிக்
கொடுத்துள்ளான்.
62.
திருப்பாசூர்
பசுமை
+ ஊர் = பாசூர். நீர்வளத்தால் நிலம் பசுமையாய்
விளங்குவதால் இப்பெயர்பெற்றதாதல் வேண்டும் தலமரம் மூங்கில்
ஆதலாலும், இறைவர் மூங்கிலடியில் முளைத்தவர் ஆதலாலும்
இப்பெயர்பெற்றனர் என்பர். (பாசு =மூங்கில்).
இது
திருவள்ளூர்க்கு வடக்கில் 5 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.
திருவள்ளூர் - பேரம்போக்கம் நகரப் பேருந்திலோ காஞ்சிபுரத்திலிருந்து
கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்திலோ பாசூர்
செல்லலாம்.
இறைவர்
திருப்பெயர் பாசூர்நாதர். இறைவி திருப்பெயர் பசுபதிநாயகி.
குறும்பர்
அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள் கரிகால் சோழன் மீது
ஏவிய பாம்பைச் சிவபெருமான் எழுந்தருளித் தடுத்து ஆட்டினார் என்பது
தலமான்மியம். இச்செய்தி, படவரவொன்றது ஆட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே என்னும் இத்தலத்துக்குரிய
திருத்தாண்டகப் பகுதியாலும் இது உறுதி எய்துகின்றது. சந்திரன் பூசித்துப்
பேறு பெற்றான்.
|