பக்கம் எண் :

247

தேவன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், இவர்களின்
காலங்களிலும், விஜயநகர அரசர்களில் வீரப்பிரதாப மகாராயர், தேவராய
மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள்
இருக்கின்றன. இவ்வூர் (மறைக்காடு) உம்பள நாட்டுக் குன்றூர் நாட்டைச்
சேர்ந்தது என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இராஜகேசரி
வர்மனாகிய திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன் கல்வெட்டு,
திருப்பதியம் பாடுவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியைத்
தெரிவிக்கின்றது. இராஜேந்திரசோழன் கல்வெட்டு, விக்கிரமன் சந்தியையும்
ஏனைய கல்வெட்டுக்கள், விளக்கினுக்கு, ஆடு, ஈழக்காசு இவைகள்
கொடுக்கப்பட்டதைப் புலப்படுத்துகின்றன. மராத்திமொழியில் உள்ள
கல்வெட்டு பிரதாபசிங் மகாராசர், துளஜாமகாராசர் என்போரைப்பற்றிக்
கூறுகின்றன.

                   77. திருமாந்துறை

     இது வடகரை மாந்துறை என்று வழங்குகின்றது. காவிரிக்குத்
தென்கரையில் ஒரு மாந்துறை இருக்கின்றது. இதை வேறு பிரித்துக்
காட்டுதற்கு வடகரை மாந்துறை என்னும் பெயர் வழங்குகிறது.

     தென்கரைமாந்துறை வைப்புத் தலமாகும். தனக்கெனத் தனிப்பதிக
மின்றி, வேறு ஓர் பதியில் வைத்துப் பாடப்பட்டது வைப்புத்தலம் என்னும்
பெயர்பெறும்.

     இது லால்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கில் 5 கி. மீ.
தூரத்தில் இருக்கின்றது. இது காவிரி வடகரையில் ஐம்பத்தெட்டாவது
தலமாகும். திருச்சிராப்பள்ளியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பேருந்துகள்
செல்கின்றன.

     இறைவர் திருப்பெயர் ஆம்பிரவனநாதர். இறைவி திருப்பெயர்
அழகம்மை.

     மருதவானவரும் (மருத்துக்களும்) கண்ணுவ முனிவரும் பூசித்துப்
பேறுபெற்றனர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

     இதற்கு ஆம்பிரவனம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆம்பிரவனம்
என்றால் மாமரங்கள் உள்ள காடு என்று பொருள்.