பக்கம் எண் :

252

கூற்றத்தில் அடங்கியிருந்தது. முதலாம் இராஜராஜன், பரகேசரிவர்மன்
இராஜேந்திர சோழதேவன் I  இவர்களின் கல்வெட்டுக்கள் நெற்குப்பையாகிய
திருமுதுகுன்றம் எனக் குறிப்பிடுகின்றன.

     அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் நெற்குப்பை ஊரவர்கள், திருமுது
குன்றம் கோயிலில், திருப்பதியம் பாடுவார்க்கு நிலம் அளித்திருந்தனர்.
இச்செய்தியை முதலாம் இராஜராஜன் கல்வெட்டு உணர்த்துகிறது.
பரகேசரிவர்மனாகிய திருபுவன சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பத்தாம்
ஆண்டுக் கல்வெட்டு, திருமுதுகுன்றம் உடையார்க்கு,
விருதராப்பயங்கரவளநாட்டு, மேற்காநாட்டு, பெண்ணாகடமாகிய
முடிகொண்டசோழன் திறப்பில் 35 வேலி நிலம், தேவதான இறையிலியாகக்
கொடுக்கப்பட்டிருந்தது. மற்றும் திருவாதிரைத் திருநாளுக்கும்,
பஞ்சகவ்வியத்திற்கும், நுந்தா விளக்குகளுக்கும், அயன காலங்களுக்கும்,
கோபுரம் திருமதில் மண்டபம் இவைகள் பழுது பார்ப்பதற்கும் நிலங்கள்
அளிக்கப் பெற்றுள்ளன.

     இக்கோவிலில் திருக்கடம்பந்துறை உடைய நாயனார்,
பிரமேசுவரமுடையார் இவர்களைப்பற்றிக் குறிக்கப்பெற்றுள்ளன. 1253 இல்
கோப்பெருஞ்சிங்கன் ஹொய்சல அரசர்களுடைய தண்டநாயக்கரை,
பெரம்பலூரில் தோற்கடித்து, அவருடைய மனைவி, செல்வம்
இவைகளையெல்லாம் தனதாக்கிக் கொண்டான். அப்பாவம் நீங்குவதற்கு
முதுகுன்றத்து இறைவனுக்கு நிவந்தம் அளித்துள்ளான்.

80. தென்திருமுல்லைவாயில்

     சீகாழிக்குக் கிழக்கே பதின்மூன்று கி. மீ. தூரத்தில் கடற்கரையில்
இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஏழாவது ஆகும்.
சிகாழியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

     இறைவர் திருப்பெயர் முல்லைவனநாதர். இறைவியாரின் திருப்பெயர்
கோதையம்மை.

     தலவிருட்சம் முல்லை.

     உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம்
பெற்றதலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மாத்திரம் இருக்கிறது.