பக்கம் எண் :

96

இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத்தேவர்க்கு
நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின்
வரிகளைக் கொடுத்துள்ளான்.

     இத்திருக்கோயிலில் உள்ள, நிருத்தமண்டபம் கீழையூர் மலையமான்
பெரிய உடையான் இறையூரானால் கட்டப்பெற்றது. இக்கோயிலினுள்
இருக்கும் பொன்னனையார் அம்மை கோயில், திருபுவன வீரதேவர்
எனப்படும் மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரின் முப்பதாம்
ஆட்சியாண்டில் கருங்கல்லால் கட்டப்பெற்றது. இம்மன்னர் காலத்தில்
பாண்டி மண்டலத்துப் பட்டண சாமி என்பவரால் இக்கோயிலின் சில
பகுதிகள் பழுது பார்க்கப்பட்டன.

     முதற் குலோத்துங்கன் தன் ஆட்சியின் முப்பத்தாறாம் ஆண்டில்
காஞ்சியில் இருந்தான். அதுபொழுது வாண கோவரையன் சுத்தமல்லன்
முடிகொண்டான் வேண்டுகோளின்படி, பெண்ணை யாற்றின்
வடகரையிலுள்ள இராஜேந்திர சிங்கவளநாட்டுக்காரரிடம் புத்தூரில் உள்ள
நிலங்களை வீரசோழ நல்லூர் என்னும் பெயரால் ஒப்பில்லாதநாயனார்
கோயிலுக்குத் தேவதானமாகக் கொடுத்துள்ளான்.

     திருபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவரின் ஆறாம் ஆண்டில்
மலையமான் பெரிய உடையான் இறையூரன் தளர்ந்தபின் இராஜராஜ
சேதிராயன் திருவாதிரைத் திருநாளைக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான்.
குருக்காடு, அத்தி, திருவண்ணாமலை உடையானாகிய இருங்கோளன்
பொன் அனையார் அம்மை கோயிலுக்கு, பெருநிலையார் நல்லூரின்
வரிகளை நித்தியவழி பாட்டிற்குக் கொடுத்துள்ளான்.

     பாண்டிமண்டலத்துக் கேரளசிங்க வளநாட்டுத் திருக்கோட்டியூர்
ஆழ்வான் கூத்தன் ஜெயசிங்கதேவன், தன் அரசனாகிய விக்கி்ரமபாண்டியன்
திருப்பெயரால், இக்கோயிலிலுள்ள திருவரங்கைக் கட்டியுள்ளான்.
திருமடைப்பள்ளிக்கு வடபாலுள்ள திருநடமாளிகையும் இவனால்
கட்டப்பெற்றது. இந்தக்கோயிலின் கிழக்குத் தாழ்வாரமும் இவனால்
கட்டப்பெற்றதாகும். இத்தாழ்வாரத் தூண்கள் ஒவ்வொன்றிலும்
விக்கிரமபாண்டியன் என்னும் பெயர் செதுக்கப்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகள்
திருபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியதேவனது நான்காம் ஆண்டில்
வெட்டப்பெற்ற கல்வெட்டால் அறியக்கிடக்கின்றன.