|
இக்கோயில்
வெளிப்பிராகாரத்தில் உள்ள மண்டபம் நீண்ட காலமாகக்
கட்டப்பெற்றும் முடியப்பெறாமல் குறைவுள்ளதாகவே இருந்தது. இம்மண்டப
வேலை பூர்த்தியானால், இக்கோயில் தேவரடியாள் பொன்னாண்டையின்
மகன் இளவெண்மதி சூடினான், தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகச்
சொல்லி அம்மண்டப வேலை முடிவுபெற்றதும், தன் உயிரை மாய்த்துக்
கொண்டான். அவனுடைய வீரச் செயலைப் பாராட்டி அவன் சந்ததியார்க்கு
ஆயிரங்குழி நிலம் உதிரப்பட்டியாகக் கோயிலாரால் கொடுக்கப்பெற்றுள்ளது.
இச்செய்தி மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியதேவனது
பத்தாம் ஆண்டுக் கல்வெட்டால் விளங்குகின்றது. இளவெண்மதி சூடினான்
தன் தலையை வெட்டிக்கொள்வதுபோல் உருவம் ஒன்று செதுக்கப் பெற்றுக்
கோயிலுக்கருகில் தெருவில் வைக்கப் பெற்றிருக்கிறது.
கோப்பெருஞ்சிங்கன்
காலத்தில், பேரெயிலில் உள்ள சோழ
துங்கபல்லவர் அரையன்பெண்ணைத் தென்கரையில் மெய்குன்ற நாட்டிலுள்ள
செம்பியன்மாதேவி என்னும் ஊரை, ஒப்பில்லாத நாயனார்க்கு
நித்தியவழிபாட்டிற்கும் நந்தாவிளக்கினுக்கும் கொடுத்துள்ளான். இம்மன்னன்
காலத்திலே திருக்கோவலூர் வணிகன் ஒருவன் கோயில் நிலங்களைச்
சாகுபடிக்கு உபயோகமாகுமாறு செய்து, கோயில்தானத்தாரிடமிருந்து
இரண்டாயிரம் குழி நிலங்களைப் பெற்றான்.
ஒப்பில்லாத
நாயனார் கோயிலில் திருக்கோபுரம், கோபு நாயக்கன்,
வாளுநாயக்கன், பாபு நாயக்கன், நாகம்மநாயக்கராயன் இவர்களால்
கட்டப்பெற்றது. கொள்ளியூர், பாலூர், புத்தூர் இவைகளுக்கு நீர் பாயக்கூடிய
வாய்க்காலை, கீழையூர், இராஜராஜசேதிராயர் தம் தாயார் பூமாழ்வார்
பெயரால் வெட்டுவித்தார். விக்கிரம சோழதேவரின் 13ஆம் ஆட்சியாண்டில்,
இப்பக்கங்களில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது.
இவைபோன்ற
பல செய்திகளை இவ்வூர்க் கல்வெட்டுக்கள்
அறிவிக்கின்றன. மலைய மன்னர்களைப்பற்றி ஆராய்வார்க்கு இக்கோயிற்
கல்வெட்டுக்கள் பெரிதும் பயன்பெறும்.
7.
திருஅநேகதங்காவதம்
இது
வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று.
|