பக்கம் எண் :

98

கேதாரம் செல்லும் வழியில் உள்ளது. இறைவி கௌரி என்னும்
திருநாமத்தோடு தவஞ்செய்த பதியாதலின் கௌரிகுண்டம் என்றும்
கூறப்பெறும். இமயத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை,
திருக்கேதார யாத்திரை செல்வோர் எளிதில் தரிசித்து இன்புறலாம்.

     ரிஷி கேசத்திலிருந்து கேதாரம் செல்வோர் கௌரி குண்டம் வரை
பேருந்துகளில் செல்லலாம். கௌரி குண்டத்தில் உள்ள சிறிய வெந்நீர்ஊற்று
நீராடற்கேற்றது. இங்குள்ள ஆலயமே அநேகதங்காவதமாகும். இதில் சந்திர
சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம்
ஒன்று உள்ளது.

     இறைவரின் திருப்பெயர் அநேகதங்காவதநாதர். இறைவியாரின்
திருப்பெயர் மனோன்மனி.

                     8. திருஆக்கூர்

     சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம்.

     மயிலாடுதுறை-பொறையாறு பேருந்து வழியில் ஆக்கூர் உள்ளது.
மயிலாடுதுறை சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நகரப் பேருந்துகளும்
உள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆலயம் உள்ளது.

     ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும், அங்குள்ள கோயிலுக்குத்
தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர்
(சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில்
என்று பொருள்படும்.

     மாடக்கோயில் என்பது யானை ஏற முடியாதபடி படிக்கட்டுகள்
வைத்துக் கட்டப்பெற்றதாகும். இத்தகைய கோயில்கள் கோச்செங்கணான்
என்னும் சோழமன்னனால் கட்டப்பெற்றன என்பர்.

     இறைவரின் திருப்பெயர் தான்தோன்றியப்பர். வடமொழியில்
சுயம்புநாதர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் வாணெடுங் கண்ணியம்மை.
வடமொழி்யில் கட்கநேத்திரி.

     அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சிறப்புலி