பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)98. திருவீழிமிழலை1159

தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை, திருச்சண்பை என்னும்
திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான். அவ்வாறு,
திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்
பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும்.

     கு-ரை: இவை - இவற்றின். ஒண்பொருள் - சீரிய கருத்தை.
உணர்வதும் உணர்வு - உணர்வதுவே உணர்வெனப்படுவது. தேற்றேகாரம்
பிரித்துக் கூட்டுக. உம்மை உயர்வு சிறப்பு.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே.
அடைத்தது மாமறைக் காடர்தங் கோயிற் கதவினையன்
றுடைத்தது பாணன்றன் யாழின் ஒலியை உரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமனைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினை அறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.

                          - நம்பியாண்டார் நம்பி.