பக்கம் எண் :

1266திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4017. திகழ்கைய தும்புகை தங்கழலே
       தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே
     யிருந்தனு வோடெழின் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே
     மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே
     தக்க தராயுறை சுந்தரரே.              6


     6. பொ-ரை: இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு
எழும் நெருப்பே. தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே.
தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில்
எந்தியுள்ளார். பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி
தந்தது மானிட உடம்பில். பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய
சடையிலே. மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர்.
தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர். அவர் எக்காலத்திலும் அழியாது
நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர்.

     கு-ரை: திகழ் - விளங்குகின்ற, கையதுவும் புகை தங்கு, அழலே,
நெருப்பே, தேவர்தேவர்(கள்) தொழுவதும், தம் கழலே - தமது
திருவடியையேயாம். இகழ்பவர் - தம்மை அலட்சியம் செய்தவர்களாகிய.
தாம் - தாருகவனத்துமுனிவர் (ஏவிய) ஒருமான். இடம் - இடக்கரத்தில்
உள்ளது. இருந்தனுவோடு - பக்குவ ஆன்மாக்களுக்கு (உபதேசிக்கும்
பொருட்டு) அவர்தம் பெருமைபொருந்திய உடம்பிற்கு. எழில் - அழகிய.
மானிடவடிவமே என்றது “மானிடரை ஆட்கொள்ள மானிட வடிவங்
கொண்டு வருவன்” என்ற கருத்து. அது “அருபரத் தொருவன் அவனியில்
வந்து, குருபரனாகியருளிய கொள்கை” எனவும், “இம்மண் புகுந்து
மனித்தரை யாட்கொள்ளும் வள்ளல்” எனவும் வரும் திருவாசகத்தால் (தி.8)
அறிக. மிகவரும், நீர் கொளும் - தண்ணீரைத் தன்னகத்து -அடக்கிய, மஞ்சு
- மேகங்கள். அடைவு - தம்மிடம் சேர்தலையுடையது. என்றது சிவபெருமான்