பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்185

என்பதையும், அவன் வேண்டுகோளின்படி, அவன் வம்சாதியாக வருகிற
மாளிகை மனையில், நாள்தோறும் அடியார்க்கு அமுது இடப்பெற
வேண்டுமென்று மந்திரியாகிய குலோத்துங்க சோழ மாவலிவாணராயன்
அரசனிடம் விண்ணப்பித்துக்கொள்ள, அரசனும் (விக்கிரம சோழனும்)
அதற்கு இசைந்தருளியதை உணர்த்துவதாகும்.

     நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரியபுத்திரன் மநு, தன்
புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின்கன்றகப்பட்டு, வருத்தமுற, அதன்
மாதாவான சுரபி கண்டு துக்கித்து மநுவின் வாசலின் மணியை எறிய,
அதுகேட்டு மநு தன் மந்திரி இங்கணாட்டுப் பாலையூருடையான்
உபயகுலாமலனைப் பார்த்து நீசென்று இதனை அறிந்து... வாயிற்புறத்து ஒரு
பசுமணி எறியாநின்றது என்று சொல்ல அதுகேட்டு மநு புறப்பட்டுப்
பசுவையும் பட்டுக்கிடந்த.... படி வினவித் தன் புத்திரன் பிரியவிருத்தனைத்
தேரிலே ஊர்ந்து குறுக்கவென்று உபய குலா மலனுக்குச் சொல்ல அவன்
சந்தாயத்தோடும் புறப்பட்டுத் தன் செவிகளைத் தரையிலே குடைந்துகொண்டு
துக்கித்தானாய், மநுதானே புறப்பட்டுத் தன் புத்திரனைத் தானே தேரிலே
ஊர்ந்து குறுக்க, அப்போதே நாம் அவனை அநுக்கிரகித்து, கன்றுக்கும்
மந்திரிக்கும், மநு புத்திரனுக்கும் ஜீவன்கொடுக்க, அதுகண்டு மநு
சந்தோஷித்துக் கன்றினை எடுத்துக்கொண்டு பசுக்குக் காட்டி, குடு....
அபிஷேகம் பண்ணி” எனத் தொடர்கின்றது.

     திருவாரூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு:- முதல் இராஜராஜன்
காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத்
திருவாரூர் எனவும், முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், அதிராஜேந்திர
வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் எனவும், முதற்
குலோத்துங்கசோழன் காலத்தில் செயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க்
கூற்றத்துத் திருவாரூர் எனவும் வழங்கப்பட்டு வந்தது.

     வீதிகளுக்குப் பெயர்கள்:- இவ்வூர் வீதிகளுக்கு ஆன்றோர்களால்
இடப்பெற்றிருந்த பெயர்கள் 1கல்வெட்டுக்களில்


     1 See the South Indian Inscriptions Volume IV, No.397. page
119.

     See also the Annual Reports on South Indian Epigraphy for
the year 1890, No. 73-74; year 1894 No.164; year 1901 No.269; year
1904 No. 533-579; year 1918 No. 553; year 1919 No. 669-681.