|  
        
        உசிவமயம்
 திருச்சிற்றம்பலம்
 
 சைவசமயகுரவர் திருவடி வாழ்க
 
 திருஞானசம்பந்த சுவாமிகள்
 
 தருமை ஆதீன வித்துவான்,
 
 ஆதீனப் பல்கலைக்கல்லூரித் துணை முதல்வர்,
 
 சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி, புலவர்,
 முத்து.சு.மாணிக்கவாசக முதலியார்
      திருஞானசம்பந்தர் 
        சீகாழியில் சிவபாதவிருதயர்க்கும் பகவதிக்கும் கௌணிய கோத்திர சிகாமணியாய்த் தோன்றியவர். மூன்றாவது வயதில்,
 திருக்குளக்கரையில், திருத்தோணியப்பர் அம்மையுடன் எழுந்தருளி நல்கிய
 ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் ஆனார். தோடுடைய செவியன்
 எனத் தொடங்கிய திருப்பதிகம் பாடிச் சுட்டுதற்கு எட்டாத கடவுளைச்
 சுட்டிக் காட்டினார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றார். பல
 தலங்களை அடைந்து தரிசித்துப் பாடியுள்ளார். திருநீலகண்டப்
 பெரும்பாணர்க்குத் தம் அருட்பாக்களை யாழில் அமைத்து இசைக்கும்
 வரங்கொடுத்தவர். திருநெல்வாயில் அரத்துறையில் முத்துப்பல்லக்கு,
 முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் பெற்றார். உபநயனம் புரியுங்கால்,
 ஓதியுணர்ந்த அந்தணர்க்கு ஓதாதுணர்ந்த நம் பெருமானார் ஐயம்திரிபகற்றி,
 ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் உபதேசித்தருளினார்.
       திருநாவுக்கரசரொடு 
        கூடியிருந்தார். அவருக்கு அப்பர் என்ற திருப்பெயர் உண்டானது, இவர் அழைத்ததால்தான்.
 திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் புதல்வியைப் பற்றிய முயலகன்
 என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில்
 நச்சுக்காய்ச்சலைத் தவிர்த்து அடியரைக் காத்தார். திருப்பட்டீச்சரத்தில்
 முத்துப்பந்தரைப் பெற்றார். திருவாவடுதுறையில் உலவாக்கிழியாக ஆயிரம்
 பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப் பதிகம் பாடி, அருட்பாடல்
 கருவியில் அடங்காத சிறப்பைப் புலப்படுத்தினார்.
 |