இணை
அடிகளை அன்புறு சிந்தையராய் மனத்தால் நினைப்போரும்,
வாக்கினால் ஏத்தித் துதிப்போரும், காயத்தால் தொண்டு செய்வோரும்,
மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் பெருமானை
வழிபடுவோரும் துன்புறார். எனவே இன்புறுவர் என்பது தெளிவு. பாடலைக்
காண்போம்:
அன்புறு சிந்தைய
ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறு வார்அல்லர் தொண்டுசெய் வாரே.
(தி.3 ப.125 பா.3) |
ஆச்சார்யபுரம்:
சைவ
சமய ஆசாரியராகிய ஞானசம்பந்தருக்கு முத்திப்பேறு அளித்த
இடமாதலின் இத்தலம் ஆச்சாரியபுரம் எனப்பெற்றது. ஆச்சார்யபுரம்தான்
ஆச்சார்யாள்புரம் என்றாகி ஆச்சாள்புரம் ஆகியது எனத்தெரிகிறது.
இதற்குமுன்
இத்தலம் நல்லூர்ப் பெருமணம் என்றும், திருப்பெருமணம்
என்றும் பெயர் பெற்றிருந்தது என்பது சேக்கிழார் திருவாக்கால் புலனாகிறது.
ஞானசம்பந்தரும் நல்லூர்ப் பெருமணம் என்றே குறிப்பிடுகின்றார்.
சம்பந்தருக்குத் திருமணம் நல்லூர்ப் பெருமணத்தில் நடந்ததும்,
அத்திருமணமே பெருமணமாக (முத்திப் பேறாக) நிறைவெய்தியதும்,
திருவருட்பொருத்தமேயாம்.
மணம்-கலப்பு.
ஈருயிர் ஓருயிராகக் கலத்தல். பெருமணம்-ஆருயிர்
இறைவனுடன் கலத்தல்-அஃதாவது முத்திப்பேறு. ஞானசம்பந்தர்
முத்திப்பேற்றுக்குரிய பெருமை நல்லூர்ப் பெருமணமாகிய இத்தலத்திலேயே
எய்தியது என்பது திருவருட் சிறப்பாகும்.
இத்தகைய
புனிதத் தலங்களின் சிறப்பையும், திருமுறையின்
பெருமையையும் ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், உயிர்கள் உய்திபெற
ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
ஒண்தமிழ்
ஓதி உயர்வுறுவோமாக.
|