பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)18. திருவைகல்மாடக்கோயில்529

2996. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
  பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.      10

2997. மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
  சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.     11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும், கஞ்சி
குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும், புத்தர்களின் பிடக
நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது, மடம்
என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில்
மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.

     கு-ரை: கடு - உடைவாயினர் - கடுக்காயைத் தின்பவர் (புத்தர்). கஞ்சி
வாயினர் - கஞ்சியைக் குடிப்போர் (சமணர்). இவர்கள் சொல்லப்படுகின்ற
திரிபிடகம் முதலிய அவர்கள் சமய நூல்களைப் பொருட்படுத்தாதவராகிய
சிவனடியார்கள் பாராட்டும் கோயில். வடமலை-மேருமலை (போன்ற)
மாடக்கோயிலாம்.

     11. பொ-ரை: அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும்
இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச்
சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில்
அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச்
சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.

     கு-ரை: சந்து - சந்தன மரங்கள். சண்பை-சீகாழி. சிந்தை செய்பவர்
சிவலோகத்து இருப்பர்.