பக்கம் எண் :

548திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 22. பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)

பதிக வரலாறு:

     மறை முனிவராகிய பிள்ளையார் திருமுன்நின்று மறை நான்கும்
தந்தோம் என்றனர் அந்தணர். அவர்க்குப் புகலிவந்த புண்ணியனார்
எண்ணிறந்த புனிதவேதம் ஒப்பில்லாதவாறு ஓதினார். அவர் பலரும்
அப்பெருமானே கண்முன் வரும் தியானப் பொருள் என்று வணங்கினர்.
முன்பேவல்ல மறைகளைக் கேட்டு ஐயம் தீர்ந்தும் வாழ்வுற்றனர். மந்திர
முதலிய வற்றையும் அருளப்பெற்றனர். அவர் தெளியும் வண்ணம்
மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது முதல்வனார் திருவைந்தெழுத்தே
என்று உணர்த்தியருள, “செந்தழல் ஓம்பிய செம்மைவேதியர்க்கு அந்தியுள்
மந்திரம் அஞ்செழுத்துமே” என்பது முதலிய சிறப்பைச் சுட்டிப் பாடியது
இத் திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப. தொ. எண்: 280   பதிக எண்: 22

திருச்சிற்றம்பலம்

3031. துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
  நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.           1


     1. பொ-ரை: தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம்
கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள்.
பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு
செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன்
திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு
விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து
அழித்தன திருவைந்தெழுத்தே.

     கு-ரை: துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் - தூங்கும் போதும்
விழித்துக்கொண்டிருக்கும்போதும்; போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல்
என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும்,