பக்கம் எண் :

596திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

29.மேலைத்திருக்காட்டுப்பள்ளி

பதிக வரலாறு:

     திருநெடுங்களத்து முதல்வனை, “நின்பால் நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும் இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்” என்னும் இன்னிசை மாலைகொண்டு ஏத்திப் பிறபதிகள் அனைத்தும் பணிந்து நியமம் போற்றி மேலைத் திருக்காட்டுப் பள்ளிச் செஞ்சடை நம்பர்கோயிலை எய்தி, முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்துமொய்கழற் சேவடி போற்றி செய்து, மன்றுள் நின்றாடலை மனத்துள் வைப்பாராய்ப் பாடிவாழ்த்துற நின்றது இத்திருப்பதிகம்.

பண்: கொல்லி

ப.தொ.எண்:287   பதிக எண்: 29

திருச்சிற்றம்பலம்

3107. வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
  ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.        1


     1. பொ-ரை: கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி
ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர். அப்பெருமான் மேகத்தைத்
தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும்
திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய்
விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும்.

     கு-ரை: வார், ஊர், கார், நீர் - ரகரவீற்றுச் சொற்கள் உகரச் சாரியை
பெற்றன. ஊரில் ஏற்கும் பிச்சையை யுண்பதும் வெண் தலையில். மன் உம்
இரண்டும் அசைநிலை.

     இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மையாகும். பங்கினன் நிமலர்;
பால் வழுவமைதி.