பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)28. திருமழபாடி595

3106. ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்
  சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.     11

திருச்சிற்றம்பலம்


பாவம் சேராதிருக்க அதனை ஓர் உறியில் வைத்து அவ்வுறியை ஒரு
பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்வது சமணர் வழக்கம். ஊத்தை வாய் -
ஊற்றை வாய், பல விளக்கினால் அதில் இருக்கும் சிறு கிருமிகள்
எனப்பட்டது. பொறி பிடித்த அரவு இனம் - படத்திற் புள்ளிகளையுடைய
பாம்பு. பிடித்த அரவு; பெயரெச்சத்து விகுதி அகரம் தொக்கது.

     11. பொ-ரை: இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும்
நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகமவிதிப்படி
பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை,
உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன்
அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள்
தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: ஆதிரை நாளினான் - சிவபெருமான். திருவாதிரை
சிவனுக்குரியது. ஞாலத்து ஆர் - உலகில் எங்கும் நிறைந்த; ஆதிரை
நாளினான். கோலத்தால் பாடுவார் - சிவவேடத்தோடு பாடுவோர்;
குற்றமற்றாராவர் - தேவாரத் திருமுறைகளையும், சித்தாந்த நூல்களையும்
ஓதுங்கால் இயன்ற அளவு உடற்சுத்தியோடு, விபூதி, உருத்திராக்கமணிந்து
ஓதவேண்டுமென்பது முறை. ஆதலாற் கோலத்தாற் பாடுவார் என்றார்.
ஆல் உருபு ஒடு பொருளில் வந்தது. இவ்வாறு வருதலைத் “தூங்குகையா
னோங்குநடைய” என்ற புறநானூற்றானும் அறிக. நாள்தொறும் சீலத்தான்
மேவிய திருமழபாடி. நித்திய நைமித்திக வழிபாட்டு முறைகள் நாள்தோறும்
தவறாது பொருந்திய திருமழபாடி. சீலம் - ஒழுக்கம்; இங்குச்
சிவாலயபூசையைக் குறிக்கிறது.