மொட்டு அலரும் கேதாரம்
என்று அருளியதில், ஆல என்ற சொல்லாட்சி
உள்ளதை அறிக. அகன்றோர் என்பதன் மரூஉவே ஆன்றோர். அன்னச்
சேவல் மாறு எழுந்து ஆலும் (புறம். 128) என்புழி, ஆலும் என்பது
ஒலிக்கும் என்ற பொருளதாய் நின்றதும் ஆலோலம் என்னும் வழக்கும்
உணர்க. ஆலோலம் (அகல ஓலம், ஆல ஓலம், ஆலோலம்) என்று மருவும்
முன்பு இருந்த வடிவம் உய்த்துணர்தற்பாலது. பயில் பூஞ் சோலை மயில்
எழுந்து ஆலவும் (புறம். 116) என்புழி ஆலவும் என்ற பொருள்
பயப்பதுணர்க.: முயங்கல் ஆன்றிசின் (புறம். 151) என்புழி, அமைந்தேன்
என்று பொருளுரைத்ததும், அதற்குரிய அடிச்சொல் (பகுதி) ஆங்கு
இல்லாமையும், அதன் அடி அகல் என்பதும், அஃது அகன்றிசின் என்பதின்
மரூஉவே என்பதும் அறிதல் சிலர்க்கே எளிது. ஆனாது உருவும் புகழும்
ஆகி (புறம். 6) அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் (புறம். 10)
ஆனா ஈகை அடுபோரண்ணல் (புறம். 42) என்னும் இடங்களில்,
எதிர்மறையில் வந்த ஆனாமைக்கு எவ்வடிவின் அமைந்த சொல்
உடன்பாடாகலாம்? ஆனுதல் எனலாமோ? ஆன்றல் என்றுள்ளதேல் அதன்
பகுதி யாது? அகல் + தல் = அகறல். அகல் - ஆல் என மருவி, அது, தல்
என்னும் விகுதியொடு சேருங்கால் ஆன்றல் என்றாயிற்று, ஆகவே, வீடல்
ஆல என்றதற்கு இறப்பு அகல என்ற பொருளே உரியதென்க. எனவே
இறப்பின்மை பெறப்பட்டது. ஆய்:- யாய் என்றதன் மரூஉ. யாய்
தன்மைக்கும், ஞாய் முன்னிலைக்கும், தாய் படர்க்கைக்கும் உரியன. யாயும்
ஞாயும் யாராகியரோ (குறுந்தொகை). யாயை வெறுத்ததன் பின்னை விதியை
வெறுத்தனன் (வில்லி பாரதம்) ஆய் இல்லாய்:- ஆய் இல்லாமை
பிறப்பின்மையைக் குறிக்கநின்றது. நிற்கவே இறப்பகலப் பிறப்பில் லாய்
என்றவாறாம். தோற்றம் உண்டேல் மரணம் உண்டு. இறப்பும் பிறப்பும்
இல்லாத கடவுள். பிறப்பில் பெருமான் பிறப்பினோடிறப்பிலே என்னும்
இப்பெருமான் திருவாக்குணர்க.
ஆலவாய்
- ஆலமர நிழலகம். வாய் - இடம். இல் வாழும் இடம்.
பரவ - வாழ்த்த. பரவுவார் இமையோர்கள். யானும் உன்னைப் பரவுவனே.
(வாழ்த்துவதும் எனத்தொடங்குந் திருவாசகம்). பண்பு - அருட்பண்பு.
எண் குணம். காடு - கோயில் சுடுகாடு. சருவசங்கார காலத்தில்
தானொருவனுமே நிற்றலின், அது சிறந்த வீடாயிற்று. மதுரையில் உள்ள
திருமதிலுக்கு, கபாலி என்ற பெயர் உண்டு. கடி - காவல். கூடல்:- கன்னி,
கரியமால், காளி, ஆலவாய் என்னும் நான்கன்கூட்டம் பற்றிய காரணப்பெயர்.
நான்மாடக்கூடலான படலத்து வரலாறும் கொள்ளலாம். ஆலவாய்:
மதுரையில் உள்ள திருக்கோயிலின் பெயர். குலாயது என்ன கொள்கை:-
பின்னர்
|