பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)64. திருப்பெருவேளூர்831

64. திருப்பெருவேளூர்

பதிக வரலாறு:

     தோணிபுரத்திறைவர் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுப்
பெருவேளூர் சென்று, பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: பஞ்சமம்

ப.தொ.எண்:322   பதிக எண்: 64

திருச்சிற்றம்பலம்

3481. அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை
       யவைவாழ்வார்
விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த
     வருள்செய்வார்
கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார்
     புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                          1


     1. பொ-ரை: சிவபெருமான் திருவண்ணாமலையும், திருக்கழுகுன்றமும்
ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு
எழுந்தருளியுள்ளார். விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும் வியந்து
போற்ற அருள்செய்வார். உலகிற்குக் கண்ணாக விளங்குபவர்.
வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர். முப்புரங்களை எரித்தவர்,
பெண்ணும், ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும்
திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அண்ணாமலையும், திருக்கழுகுன்றமும் ஆகிய மலைகளில்
வாழ்வார். கண்ணாவார்,

     உலகுக்குக் கருத்தானார். உலகுக்கு:- இடை நிலைத் தீவகம்.
பெண்ணும், ஆணும் ஆகிய பெருமான்.