பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)66. திருவேட்டக்குடி855

சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின் ஓசை
மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய
இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும், ஓதியும்
வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும், உடுத்தலும் இல்லாது
வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர்.

     கு-ரை: தண்டலை - சோலை. கலி - ஓசை. உண்டு - அமுத
உண்டியை உண்டு. உடுப்பில் “தோயாப் பூந்துகிலையுடுத்தலால்” ஐந்தாம்
வேற்றுமை உருபு இல் - மூன்றன்பொருளில் வந்தது. இல் என்பதற்கு
இல்லாத எனப்பொருள் கூறி மானிடரைப்போல் உண்டலும், உடுத்தலும்
இல்லாத எனினும் ஆம். வானவரோடு வானத்திருப்பார்.

திருஞானசம்பந்தர் புராணம்

அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக் குடி
     பணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
     டகன் பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரங் குறுகினார்
     குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படிஅறியப் பழு தென்றே மொழிந்துய்யும்
     நெறிகாட்டும் பவள வாயர்.

                                 -சேக்கிழார்.

வெம்பந்தம் தீர்த்து உலகாள் வேந்தன் திருஞான
சம்பந்தனை அருளால் சாரும்நாள் எந்நாளோ?

                                -தாயுமானவர்.