பக்கம் எண் :

856திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

67. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

     “பொன்மார்பின் முந்நூல் புனைந்த புகலிப்பிரான்
மாறாத்திருவுள்ளத்தோடும், புகலியின் மீண்டும் புகுந்து, திருத்தோணி
வீற்றிருந்தாரைச் செந்தமிழ்மாலை விகற்பச் செய்யுட்களால் மூல
இலக்கியமாக எல்லாப் பொருள் கோளும் முற்றப்” பாடிய திருப்பதிகங்கள்
பலவற்றுள் ஒன்று இது. சீகாழிப் பன்னிரு பெயர்களும் வந்த வரலாற்றினை
அவ்வழியே மொழிதலினால் வழிமொழித் திருப்பதிகம் எனப்பட்டது.
முடுகிய சந்தமுடைமையின் இராகம் எனப்பட்டது.

வழிமொழித் திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்:325   பதிக எண்: 67

திருச்சிற்றம்பலம்

3514. சுரருலகு நரர்கள்பயி றரணிதல
       முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
     கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
     வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை
     பரவவளர் பிரமபுரமே.              1


     1. பொ-ரை: தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும், மனிதர்கள்
வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய, காவலாகக்
கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஓர்
அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான். எல்லாச்
சுரங்களும் வரிசைபெற அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை
வரன்முறையோடு ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச்
சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன்
துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது.