பக்கம் எண் :

954திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

76. திருவேதவனம்

பதிக வரலாறு:

     சண்பைநாடு உடைய பிள்ளையார் தமிழ் மொழித் தலைவராகிய
திருநாவுக்கரசருடன், மறைக்காட்டுள் வைகிப் பணிந்து போற்றிப் பாடிப்
பரவிய பண்பயில் திருப்பதிகங்களுள் ஒன்று இது.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 334   பதிக எண்: 76

3614. கற்பொலிசு ரத்தினெரி கானினிடை
       மாநடம தாடிமடவார்
இற்பலி கொளப்புகுது மெந்தைபெரு
     மானதிட மென்பர் புவிமேல்
மற்பொலி கலிக்கடன் மலைக்குவ
     டெனத்திரை கொழித்தமணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை
     மார்கவரும் வேதவனமே.               1

 திருச்சிற்றம்பலம் 


     1. பொ-ரை: பருக்கைக் கற்கள் மிகுந்த, பாலைவனம் போன்ற
வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர்
மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற
கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே
ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும்,
பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய
உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும்.

     கு-ரை: கல் - பருக்கைக் கற்கள். பொலி - வெப்பம் மிகும்.
சுரத்தின் - பாலைநிலம் போன்ற. எரிகான் இடை - கொதிக்கும் மயானத்தில்.
மாநடம் அது ஆடி - சிறந்த கூத்தை ஆடி. மடவார் - பெண்களின். இல் -
வீடுகளில். பலிகொள் - பிச்சை கொள்வதற்கு.